காதல் அப்படியே இருக்கட்டும் …

எனக்கு சரியாக நினைவில் இல்லை
எந்த வருடம் என்று ….

சக நண்பர்களோடு வாயாடி கொண்டிருக்கையில்
நீ முதல் முதலாய் என்னை கடந்து போனாய் …

இன்னமும் நினைவில் இருக்கிறது அந்த பச்சை கலர் உடையணிந்த உன் முகம் …

எல்லாம் மறந்து நீ கடந்து போனதை பிரமை பிடித்தவனை போல பார்த்து கொண்டே இருந்தேன் …
நீ திரும்பி பார்ப்பாய் என்று உன்னையே என் கண்கள் தொடர்ந்து கொண்டிருந்தது ,நீ பார்க்கவே இல்லை …

சில மதங்களுக்கு பின் மீண்டும் நீ என் எதிரில் வேகமாக கடந்து போனாய் ,அந்த முகம் பார்த்த கணம் உயிர் ஒருமுறை போய் திரும்பி வந்ததை உணர்ந்தேன் …

மீண்டும் சில நாட்கள் கழித்து உன்னை
பார்க்கிறேன் ,பேசுகிறேன் ,சிரிக்கிறாய்…நானும் முதல் முதலாய் மனிதனாகினேன் …

உன்னை நினைத்து கவிதை வரவில்லை ,
நீ இன்னொருவனோடு பேசிய போது கண்ணீர் வரவில்லை ,
இரத்தத்தால் காதல் கடிதம் எழுத தோன்றவில்லை ,
உன் பெயரை நான் பச்சையும் குத்திக்கொள்ள வில்லை …ஆனாலும் உன்னை நான் காதலித்தேன் ,

நீ என்னோடு தினம்தோறும் பேசவில்லை ,என்னை பார்க்கும் போது வெட்கப்படவில்லை ,என்னை கண்டு வியக்கவும் இல்லை ,ஆனாலும் என் சந்தோசம் குறையவே இல்லை ..

காலங்கள் ஓடியது நானும் உன்னிடம் சொல்லவில்லை ,நீயும் என்னிடம் சொல்ல நினைக்கவே இல்லை ,ஆனாலும் என் காதல் முழுவதையும் நீ மட்டுமே நிரப்பி வைத்திருந்தாய் …

இப்படியே இருந்து விடலாமா என நினைக்கும்போது அந்த நாள் வந்தது எல்லாரும் கண்ணீர் விட்டு கதறி அழுது பிரிய நேர்ந்தது ,நான் அழவே இல்லை அந்த பிரிவு கொஞ்சம் வலித்தது …

உனது நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்க்கைய தேட ஆரம்பிக்கையில் தேடி தேடி ஓய்ந்தே போனேன் ,அப்பொழுதும் நான் உன்னை மட்டுமே தேடி கொண்டிருந்தேன் …

அதன் பின்னாளில் ஒரு பேருந்து பயணத்தில் நான் ,என் எதிர் பேருந்தில் நீயும் அந்த நொடி சிலிர்த்தே போனேன் முதல் நாள் பார்த்தது போல் பார்த்து கொண்டிருந்தேன் நீ என்னை பார்ப்பாயா என்று ,பேருந்துகள் நகர்ந்து விட்டன நான் சிலையாகி போனதே தெரியாமல் …

அதன் பின் உன்னை நான் பார்க்கவே இல்லை ,ஆனால் நினைவுகளிலும் ,கனவுகளிலும் எத்தனை முறை பார்த்தேன் என்பதை சொல்ல ஆரம்பித்தால் இன்னும் நூறு ஜென்மம் தேவைப்படும் எனக்கு …

நிறைய இடங்களில் உன்னை தேடினேன் அப்பொழுது நடந்த உலக அழகி போட்டியில் கூட உன்னை தேடிபார்த்தேன் ,உன்னை பார்க்கவே முடியவில்லை ,வேறு யாரையோ அழகி என்றது உலகம் என்னிடம் கேட்காமலே …

காலங்கள் ஓடிகொண்டே இருந்தது நீ விட்டு சென்ற இடத்தை யாராலும் நிரப்பவே முடியவில்லை ,எத்தனை ஆயிரம் பெண்களையோ கடந்து போனேன் ,ஒருத்தியை கூட இன்னொரு முறை பார்ப்போமா என்று எண்ணவே இல்லை …

பல வருடங்கள் கழித்து ஒரு காலை வேளையில் நான் நான்கு சக்கர வாகனத்திலும் ,நீ இரண்டு சக்கர வாகனத்திலும் எதிரெதிரே வந்தோம் ,அப்பொழுதும் முதல் நாள் போலவே நான் உன்னை பார்த்தேன் ,நீ எப்பொழுதும் போல சாலையை மட்டுமே பார்த்தாய்,அப்பொழுதும் கடந்து போனேன் அதே காதலோடு ...

தொலைதொடர்பு சாதனங்களின் உதவியுடன் உன்னை தேடினேன் அப்பொழுது உன்னை பார்த்தேன் என்னை போலவே உனக்கும் முடிகள் நரைத்திருந்தது ,என்னை போலவே உனக்கும் வயதாகி இருந்தது …

அப்பொழுதும் என் காதல் முடிந்துவிடவில்லை மீண்டும் மீண்டும் தேடி கொண்டேதான் இருக்கிறேன் முதல் நாள் பார்த்த அந்த முகத்தை …

எனக்கு தெரியும் எங்கோ ஒரு மூலையில் நீ சந்தோஷமாக வாழுகிறாய் என்று ,நானும்தான் …

எப்படியம் எனக்குள் இருக்கும் உனக்கான காதலை எப்படியாவது உன்னில் வந்து சேர்க்கும் வரை தேடி கொண்டிருப்பேன் …

ஆனாலும் சந்தர்ப்பங்கள் கிடைத்திடினும் எப்போதும் போல மவுனமாகவே கடந்து இருக்கிறேன்

எனது காதல் அப்படியே இருக்கட்டும் …